உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருவல்லிக்கேணி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நேற்று, சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள், ’கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி கோஷத்துடன், பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், மகா மண்டபத்தில் உற்சவருக்கு அலங்காரம் நடைபெற்றது. பின், 4:00 மணியளவில், உற்சவர் பார்த்தசாரதி மகா மண்டபத்தில் இருந்து எழுந்தருளி, உட்புறப்பாடு நடைபெற்றது. அதிகாலை, 4:30 மணியளவில், பரமபத வாசல் திறக்கப்பட்டது. அப்போது, ’கோவிந்தா... கோவிந்தா...’ என, பக்தர்கள் கோஷமிட்டனர். அதிகாலை, 5:00 மணியளவில், திருவாய்மொழி மண்டபத்தில், மூன்று சுற்றுக்கள் உற்சவர் பக்தி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில், வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளினார். வரிசையில் நிற்கும் பக்தர்கள் வசதிக்காக, கோவிலை சுற்றி நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. கோவிலுக்கு வெளியே, கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில், பரமபத வாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை, ஒளிக்காட்சியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு, சென்னை மாநகராட்சி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. நான்கு மாட வீதிகளிலும் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு, ’சிசிடிவி’ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது; பாதுகாப்பு பணியில், 500 போலீசார் ஈடுபட்டு இருந்தனர். சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்ட பிரசாதம், பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !