உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை 6:35 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் பெரியபெருமாள் வேத பாராயணத்துடன் காலை 6:35 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர்.

அவர்களை ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்தனர். பின்னர் மாடவீதி வழியாக வலம் வந்து வடபத்ரசயனர் சன்னிதியிலுள்ள ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கோவிந்தராஜபட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனையடுத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழித்துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரியபெருமாள் பக்தி உலாவுதல், மண்டபம் எழுந்தருளி திருவாராதனம் போன்றவை நடந்தன. பின் பகல் 12:30 மணிக்கு அரையர் வியாக்யானம், சேவாகாலம், தீர்த்தவிநியோகம் கோஷ்டி முடிந்து மாலை 4:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானம் வந்தடைந்தனர்.

உள்ளூர் பக்தர்கள், பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி. சின்னையா தலைமையில் 300க்கும் மேல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்த சொர்க்கவாசல் திறப்பில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சொக்கலிங்கபும் மீனாட்சி சொக்கநாதர் கோயில், அமுதலிங்கேஸ்வரர் கோயில், பட்டாபி ராமர் கோயில், பாலையம்பட்டி பெருமாள் கோயில் மற்றும் பல பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடந்தது. அதிகாலையிலேயே பக்தர்கள் திரளாக கோயில்களுக்கு சென்றனர். அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல், பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி எழுந்தருளினார். நாராயணா, கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் மூன்றுநாள் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தன. முதல்நாள் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரண்டாம்நாள் மோகினி அவதாரம் எடுத்த பெருமாள், தேவர்களுக்கு அமுதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம்நாளான நேற்று முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. நேற்று அதிகாலையில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனத்துடன் வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து பெருமாள் வெண்பட்டு அணிந்து ராஜ அலங்காரத்தில் சப்பரத்தில் வலம் வந்தார். பின், அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். கோயிலுக்கு வெளியே இருந்த பக்தர்கள் ’கோவிந்தா’ கோஷமிட்டவாறு பூக்களை துாவி வரவேற்றனர். பின் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயில் வந்தடைந்த பெருமாளை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன், சேவாசமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், பக்தசபையினர் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !