தேனி கோயில்களில் கோவிந்தா, கோவிந்தா’ கோஷத்துடன் சொர்க்க வாசல் திறப்பு
தேனி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் அதிகாலை ‘கோவிந்தா,கோவிந்தா’ கோஷத்துடன் சொர்க்கவாசல் வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அல்லிநகரத்தில் ஸ்ரீதேவி பூதேவி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு பள்ளி மாணவியின் நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 9:00 மணிக்கு மேல் ரவி ராமானுஜத்தின் பஜனை நடந்தது. இரவு 10:30 மணிக்கு மேல் மதுரை ஜெகன் சுவாமியின் ‘வைகுந்த அனுபவம்’ உபன்யாசம் நடந்தது.
* போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை நடந்த சொர்க்க வாசல் திறப்பு விழாவில் ஸ்ரீ தேவி, பூமி தேவியுடன் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீரங்கத்தில் இருப்பது போல, நவரத்தினங்களால் ஆன ரத்தின அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பெருமாளின் அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சியர் செய்திருந்தார்
* பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் பெருமாள் நாமம் ஒலிக்க வைகுண்ட சொர்க்கவாசல் திறந்தது. உற்சவமூர்த்தி வரதராஜப் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வைகுண்ட வாசல் வழியே வெளியே வந்தார். உச்சிகால பூஜை திருவாராதனம், வைகுண்ட ஏகாதசி விசேஷ பூஜை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தாமரைக்குளம் மலைமேல் வெங்கிடாஜலபதி கோயிலில் வைகுண்ட ஏகராதசியை முன்னிட்டு, மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில், சொர்க்க வாசல்வழியாக பெருமாள், லட்சுமி அம்பாளுடன் வந்தார். பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
* ஆண்டிபட்டி ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கதலி நரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சொர்க்கவாசல் வழியாக வந்து நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது<. தொடர்ந்து கோயில் பிரகாரம் வழியாக பல்லக்கில் பவனி வந்த சுவாமியை பக்தர்கள் பயபக்தியுடன் ‘கோவிந்தா’ கோஷமிட்டு கோயில் உட்பகுதியில் வைத்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை வழிபாடு செய்தனர். அன்னதானம் நடந்தது.