வத்திராயிருப்பில் வைகுண்ட ஏகாதசிவிழா: சொர்க்கவாசல் திறப்பு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நடந்த சொர்க்கவாசல் திறப்பில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது. முதல்நாள் விரதத்துடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 2ம் நாளில் மோகினி அவதாரம் எடுக்கும் விழா நடந்தது. இதில் பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமுதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 3ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. அதிகாலையில் சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், திருமஞ்சனத்துடன் வழிபாடும் நடந்தது. அதனை தொடர்ந்து பெருமாள் வெண்பட்டு அணிந்து ராஜ அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியே பெருமாள் வெளியேறினார். கோயிலுக்கு வெளியே திரண்டு நின்ற பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டவாறு பூக்களை துõவி வரவேற்றனர். பின்னர் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயிலை வந்தடைந்த பெருமாளை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன், சேவாசமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், பக்தசபையினர் ஏற்பாடு செய்தனர்.