குழந்தை இயேசு திருத்தல தேர் பவனி ஏராளமானோர் பங்கேற்பு
மணலி புதுநகர்: மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தல தேரோட்டம், விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். மணலி புதுநகரில், அற்புத குழந்தை இயேசு திருத்தலம் பிரசித்தி பெற்றது. இங்கு, தினந்தோறும் நுாற்றுக் கணக்கானோர் வந்து, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை மேற்கொள்கின்றனர். ஆண்டுதோறும் குழந்தை இயேசு திருத்தல பெருவிழா, டிசம்பர் இறுதியில் தொடங்கி, 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், 37ம் ஆண்டு பெருவிழா, கடந்த டிச., 29ல் கொடியோற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், மணலிபுதுநகர் மட்டுமின்றி சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். தேர், திருத்தலத்தை சுற்றியுள்ள தெருக்களில் வலம் வந்த போது, பாடல்கள் பாடியவாறு பக்தர்கள் நடந்து வந்தனர். நேற்று மாலை கொடியிறக்க நிகழ்வுடன், விழா நிறைவு பெற்றது.