உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல்: 12ல் திருவாபரணம் புறப்பாடு

சபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல்: 12ல் திருவாபரணம் புறப்பாடு

சபரிமலை: சபரிமலையில், மகர விளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டை துள்ளல் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் மதியம், பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில், மகரஜோதி தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். புல்மேட்டில், 1,500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர். வெளிச்சத்திற்காக, ஆஸ்கா லைட்டுகள் அமைக்கப்படுகின்றன. நாளை முதல், புல்மேட்டில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் தற்காலிக டவர் செயல்பட துவங்கும்.

பேட்டை துள்ளல்: மண்டல காலம் துவங்கியது முதல், தொடர்ச்சியாக பேட்டைதுள்ளல் நடந்தாலும், மகர விளக்குக்கு முன்னோடியாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும். இந்த பேட்டை துள்ளலுக்கு பின், இங்கு பேட்டைதுள்ளல் நடைபெறாது. நாளை பகல், 12:30 மணிக்கு அம்பலாப்புழா, மதியம், 3:00 மணிக்கு ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளல் நடத்துவர். பின், இவர்கள் பெருவழிப்பாதை வழியாக, பம்பை வந்து சன்னிதானம் வருவர்.

திருவாபரணம்: மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஜன., 12ம் தேதி மதியம் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது. அன்று காலை முதல் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில், பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும் திருவாபரணம், மதியம் உச்ச பூஜைக்கு பின், பெட்டிகளில் அடைக்கப்பட்டு, தலைசுமடாக புறப்படும். இந்த பவனி, 14-ல் மாலை, 6:20 மணிக்கு, சன்னிதானம் வந்தடையும். திருவாபரணங்கள் அணிவித்து, அய்யப்பனுக்கு தீபாராதனை நடந்த சில நிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் ஜோதி தெரியும்.

ஜன., 16 முதல் படி பூஜை : சபரிமலையில் மகர விளக்குக்கு பின், வரும், 16 முதல், 19ம் தேதி வரை, நான்கு நாட்கள் படி பூஜை நடக்கிறது. 19-ல் மாளிகைப்புறத்தில் குருதி பூஜை நடத்தி, 20-ம் தேதி காலை நடை அடைக்கப்படும். சபரிமலையில், வரும், 14-ல் மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. அன்று மாலை பொன்னம்பலமேட்டில், மகர நட்சத்திரமும், அதை தொடர்ந்து மகரஜோதி மூன்று முறையும் காட்சி தரும். இதன் பின் தினமும், இரவு, 7:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் வாகனத்தில், சன்னிதானத்துக்கு எழுந்தருளுவார். 16 - 19-ல் தினமும் இரவு, 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 18 காலை, 11:00 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். அதன் பின், நெய்யபிஷேகம் நடைபெறாது. அன்று மதியம் உச்சபூஜைக்கு முன், களபாபிஷேகம் நடைபெறும். 19-ம் தேதி இரவு, 10:00 மணி வரை, பக்தர்கள் தரிசனம் நடத்தலாம். அதன் பின், பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. அன்று இரவு, 11:00 மணிக்கு, மாளிகைப்புறத்தில் குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 6:00 மணிக்கு, பந்தளம் மன்னர் பிரதிநிதி தரிசனம் முடித்ததும் நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !