உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணியில் இன்று ஆண்டாள் கூடாரவல்லி உற்சவம்

திருப்புல்லாணியில் இன்று ஆண்டாள் கூடாரவல்லி உற்சவம்

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ஆண்டாள் கூடாரவல்லி உற்சவம் இன்று கோலாகலமாக நடக்கிறது.ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 27வது பாசுரமாக கூடாரவல்லி உற்சவம் நடக்கிறது. உடையவர் எனும் ராமானுஜரின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரையில் கூடாரவல்லி உற்சவம் நடப்பது அரிய நிகழ்வாகும். திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் இன்று காலை 5:30 மணி முதல் கூடாரவல்லி உற்சவம் கோலாகலமாக நடக்கிறது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசிக்கின்றனர்.

இதுகுறித்து வைணவ ஆர்வ லர் கே.சத்தியமூர்த்தி கூறுகையில்
,“திருப்பாவையில் 27வது பாசுரமான கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று மதுரை கள்ளழகரை நோக்கி ஆண்டாள் பாடியுள்ளார். திருச்சி ரங்கநாதரை தமக்கு திருமணம் செய்து வைக்க பிரார்த்தனை செய்தார். கள்ளழகரும் மனம் உவந்து ஆண்டாளுக்கு ஆசீர்வாதம் செய்தார். அதனடிப்படையில் ஆண்டாளுக்கும், ரெங்கநாதருக்கும் திருமணம் நடக்கிறது. ஆண்டாள் வேண்டிய 100 அண்டாவில் அக்காரஅடிசல், வெண்ணை வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார் ராமானுஜர். அவரது ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நாளில், கூடாரவல்லி உற்சவம் நடப்பது அரிய நிகழ்வாகும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !