அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அன்னுார்: கோவை மாவட்டத்தில், பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் தேர்த்திருவிழா, ஜன., 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.7ம் தேதி வரை தினமும் அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. 8ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். சண்முகம் குழுவின் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. காலை 10:25 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சாமிகள், அவிநாசி, வாகீசர் மடம், காமாட்சிதாச ஏகாம்பரநாத சாமிகள், முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக மாலை 5:35 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேர் செல்லும் வழியில் பக்தர்கள் நிலக்கடலை, பழம், பருத்தி, எலுமிச்சை ஆகியவற்றை தேரின் மீது வீசி வழிபட்டனர். ஏற்பாடுகளை, திருமுருகன் அருள்நெறிக் கழகத்தினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.