உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு : நாளை நடை அடைப்பு

சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு : நாளை நடை அடைப்பு

சபரிமலை: சபரிமலையில் நெய் அபிஷேகம் நேற்று காலை நிறைவு பெற்றது. இன்று இரவு 10:00 மணிக்கு மாளிகைபுறத்தில் குருதிபூஜை நடக்கிறது. நாளை காலை நடை அடைக்கப்படும்.மண்டல- மகரவிளக்கு காலத்தில் 60 நாட்களாக நடந்த வந்த நெய் அபிஷேகம் நேற்று காலை 10:௩0 மணிக்கு நிறைவு பெற்றது.

பின் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு களப பூஜை நடத்தினார். பிரம்மகலசம் பூஜித்து அதில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி எடுத்து கோயிலை வலம் வந்தார். பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் களபம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சபூஜை நடைபெற்றது.நேற்று இரவு 9 மணிக்கு சரங்குத்தி வரை சென்ற மாளிகைப்புறத்தம்மன் பவனி பின்னர் கோயிலுக்கு திரும்பியது. இன்று அதிகாலை ௪:௦௦ மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய் அபிஷேகம் கிடையாது. இன்று வரும் பக்தர்கள் நெய்யை கோயிலில் கொடுத்து விட்டு அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக பெற்று செல்லலாம்.இரவு 10:௦௦ மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடக்கிறது. அதன் பின்னர் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர் 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோயில் நடை அடைத்ததும் திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும்.மண்டல மகரவிளக்கு காலத்தில் பம்பையில் இருந்து பஸ் சேவை நடத்தியதன் மூலம் கேரள அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு 13.20 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.மகரவிளக்கு காலத்தில் 4.42 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 80 லட்சம் ரூபாய் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !