ஆல்கொண்டமால் கோவிலுக்கு 45 கால்நடைகள் காணிக்கை
உடுமலை: கால்நடை வளம் பெருக, ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, 38 கன்றுக்குட்டி உட்பட கால்நடைகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில், பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் திருவிழா நடந்தது. இதில், கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், உருவார பொம்மைகளை வைத்து, விவசாயிகள் வழிபாடு நடத்தினர். இந்தாண்டு, பக்தர்கள், கோவிலுக்கு, 38 கன்றுக்குட்டிகள், 7 வெள்ளாடுகள் மற்றும் ஒரு சேவலை காணிக்கையாக வழங்கியுள்ளனர். கன்றுகளை காணிக்கையாக வழங்க இந்து அறநிலையத்துறை சார்பில், கடந்த சில ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, பெரும்பாலான பக்தர்கள், கன்றுகளை விற்று கிடைக்கும் தொகையை உண்டியலில் செலுத்தும், நடைமுறையை அதிகமாக பின்பற்ற துவங்கியுள்ளனர். திருவிழாவையொட்டி, நேற்றுமுன்தினம் இரவு கோவில் வளாகத்தில், சாமி திருவீதியுலா நடந்தது. மேலும், பெதப்பம்பட்டி மைதானத்தில், ஓய்.சி.சி., குழு சார்பில், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்பகுதியைச்சேர்ந்த கிராம மக்கள் திரளாக பங்கேற்று இந்நிகழ்ச்சியை ரசித்தனர். குடிமங்கலம் போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.