சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா: பிப்.,2ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், தைப்பூசத் தேர் திருவிழா, பிப்.,2ல் துவங்குகிறது. சென்னிமலை மலைக்கு மேல் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச, தேர் பெருவிழா, 15 நாட்கள் நடக்கும். ஆதி பழநி என அழைக்கப்படும் இங்கு, தைப்பூச விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, பிப்.,1ல் கணபதி ஹோமம், கிராமசாந்தி நடக்கிறது. பிப்., 2ல் காலை, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பிப்.,3ல் இரவு பல்லக்கு சேவை, 4ல் மயில் வாகனக்காட்சி, 6ல் பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளிமயில் வாகனக்காட்சி, 7ல் யானை வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா நடக்கிறது. இந்நிகழ்வுகள் அனைத்தும், இரவு, 8:00 மணிக்கு நடக்கிறது. பிப்., 8ல் மாலை, 6:00 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சி, இரவு, 8:00 மணிக்கு காமதேனு வாகனக்காட்சி, 9ல் மாலை, 6:00 சிறப்பு அபிஷேகம், எட்டு மணிக்கு வசந்த திருக்கல்யாணம் நடக்கிறது.
தேரோட்டம்: பிப்.,10ல் அதிகாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம், காலை, 7:00 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் மாலை, 5:00 மணிக்கு, தேர் நிலை வந்தடைகிறது. பிப்.,12ல் இரவு, 7:00 மணிக்கு, பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி, 13ல் பூத வாகனக்காட்சி நடக்கிறது.
மகா தரிசனம்: பிப்.,14ல் காலை, 9:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதே முத்து குமாரசுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மகாதரிசனம் அன்று நடராஜப் பெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணிய ஸ்வாமி வள்ளி, தெய்வானை உடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா அதிகாலை, 5:00 மணி வரை நடக்கிறது. பிப்.,15ல் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், தைப்பூச தேர்த் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் முருகையா, கோவில் செயல் அலுவலர் அருள்குமார், அலுவலர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, பிப்., 3 முதல், 14 தேதி வரை தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.