சிங்க நகரில் ஒரு தங்கக்கோயில்
சிங்க நகராம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் பக்தர்களின் பரந்த மனத்தால் இன்று தங்கக்கோயிலாய் ஜொலிக்கிறது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் ஆளுகைக்குட்பட்ட இக்கோயில் முன்பு மன்னர் கூன்பாண்டியன் ஆட்சியின் போது கட்டப்பட்டு தேவஸ்தானம் வசம் ஒப்படைக்கப்பட்டது. வைகாசியில் நடைபெறும் தேரோட்டத்துடன் கூடிய 10 நாள் திருவிழா சிறப்பு அம்சமாகும். இந்த சிறப்புக்கு வலு சேர்க்கும் விதமாக இக்கோயிலின் மூலவர் சன்னதி உள்ளிட்ட 5 சன்னதிகளின் விமானங்கள் தங்கத்தகடு பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. பக்தர்கள் உபயமாகக் கொடுத்த தங்கத்தைக் கொண்டு 65 லட்ச ரூபாய் செலவில் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இது தவிர வெள்ளித்தேர், வெள்ளிக்கொடி மரம், வெள்ளிக்கதவு, வெள்ளிவாகனங்கள் என அனைத்தும் சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் வெள்ளியாய் மின்னுகின்றன. சிங்கம்புணரி அய்யனார் கோயில் தங்கம், வெள்ளி மயமாக காட்சி தருகிறது.
திருப்பணிக்குழுத்தலைவர் இராம.அருணகிரி கூறியதாவது: வெள்ளித்தேர் செய்ய முடிவுசெய்து முதலில் தேக்கு மரத்தில் தேரை வடிவமைத்தோம். சில காரணத்தால் 5 ஆண்டு வேலை தாமதம் ஆனது. பிறகு தேவஸ்தானத்தினர் 85 கிலோ வெள்ளி கொடுத்தனர். மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் என 167 கிலோ கொடுத்தனர். வெள்ளித்தேர் முழுமைபெற்று 32 கிலோ மீதமிருந்தது. அதைக்கொண்டு வெள்ளிக்கொடிமரம் அமைத்தோம். அந்தந்த மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமியின் வீதியுலா வாகனங்கள் அனைத்திலும் வெள்ளித்தகடு பதிக்கப்பட்டன.வெள்ளி வேலைகள் முடிவடைந்த நிலையில் பக்தர் ஒருவர் 120 கிராம் தங்கத்தைக் கொடுத்து தங்கக்கோபுர வேலைகளை ஆரம்பியுங்கள்,என்றார். பக்தர்கள் தொடர்ந்து தங்கம் வழங்கியதால் மூலவர், பிடாரி அம்மன், விநாயகர், முருகன், சுயம்பு ஈஸ்வரர் ஆகிய 5 கோபுரங்களிலும் தங்கத்தகடு பதிக்கப்பட்டுள்ளது. விரைவில் ராஜ கோபுர கலசம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளையும் தங்கமயமாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.