மழை வேண்டி வருண ஜெபம் கூட்டு பிரார்த்தனை
மேட்டுப்பாளையம்: மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் தென் திருமலை வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில், வருண ஜெபமும், கூட்டு பிரார்த்தனையும் நடந்தன. தமிழகத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததால் வறட்சி நிலவுகிறது. விவசாயம் பாதிப்படைந்துள்ளது. இதனால், மூன்று மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆற்றில் நீர் வரத்தும் குறைந்துள்ளது. இதேநிலை நீடித்தால், வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் மேட்டுப்பாளையம் அருகே தென்திருமலை வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் வருண ஜபம் நடந்தது. கோவிலில் உள்ள வசந்த புஷ்கரணியில் அர்ச்சகர்கள் தண்ணீரில் நின்றபடி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மழை வரும் வரை கோவிலில் தினமும் வருண ஜெபமும்; கூட்டு பிராரத்தனையும் நடைபெறும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.