பகவதியம்மன் கோவில் விழாவில் இன்று எருமைக்கிடா பலி நிகழ்ச்சி
மொடக்குறிச்சி: பகவதியம்மன் கோவில் திருவிழாவில், எருமைக்கிடா பலி தரும் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்த, அவலூர் பகவதியம்மன் கோவில் விழா, நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆத்திகாட்டு வலசு மக்கள் சார்பில், வடிசோற்று மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை பகவதியம்மனுக்கு அரண்மனை அபிஷேகம் நடந்தது. மாலையில் பக்தர்கள், காவிரியிலிருந்து காவடி தீர்த்தம் எடுத்து வந்தனர். இன்று (30ம் தேதி) அதிகாலை பெரும் பூஜை நடக்கிறது. இரவு, 11:00 மணிக்கு எருமை கிடா பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். நாளை, (31ம் தேதி) அதிகாலை, 2:00 மணியளவில், கோவில் கிணற்றில், கும்பம் விடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.