காளஹஸ்தி புதிய ராஜகோபுரத்திற்கு நாளை கும்பாபிஷேகம்
திருவள்ளூர்: ஆந்திர மாநில காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்திற்கு, நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில், சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் வாயு தலமாக, காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். கி.பி., 15ம் நுாற்றாண்டில், கிருஷ்ண தேவராயரால், 140 அடி உயரத்தில் கட்டப்பட்ட கோவில் ராஜகோபுரம், 2010 மே 26ல், இடிந்து விழுந்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர், ஆறரை ஆண்டுகளாக, புதிய கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். 50 கோடி ரூபாய் செலவில், புதிய ராஜகோபுரத்தை, 141 அடி உயரத்தில் கட்டி முடித்து உள்ளனர். கடந்த, 19ல் துவங்கிய யாகபூஜை, 29ல் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று, புதிய ராஜகோபுரத்துக்கு தங்க கலசங்கள் பொருத்தப்பட உள்ளன. தொடர்ந்து, யாக பூஜை, பூர்ணாஹூதி நடைபெறும். நாளை காலை, 7:00 மணிக்கு, ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறும். பிப்., 8ம் தேதி காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசூனாம்பிகை மற்றும் நடராஜ சுவாமி மூலவர்களுக்கு, மகா கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, அன்றிரவு, 7:00 மணி முதல் 8:00 மணி வரை, காஹஸ்தீஸ்வரர் - ஞானபிரசூனாம்பிகை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.