மாபெரும் வீரர் மானம் காத்தோம்
உண்மை, அன்பு, தூய உள்ளம் ஆகியவற்றை எதிர்த்து நிற்க முடியாது, நீங்கள் மட்டும் உண்மையானவர்களாக இருந்தால் போதும். யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. கற்றுத்தரவோ, மக்களைக் கைதூக்கி விடவோ நாம் வரவில்லை. தொண்டு செய்வதற்காகவே வந்திருக்கிறோம். உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தையும் விரிவாக்குங்கள். வாழ்க்கையில் எப்போதும் பொறாமையை விலக்கினால், இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான செயல்கள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். கீழ்த்தரமான தந்திரங்களால் உலகில் மகத்தான செயல் எதையும் சாதிக்க முடியாது என்பதால் அவற்றில் கவனம் செலுத்த வேண்டாம். மாபெரும் வீரர்களும், தன்மானம் கொண்டவர்களும், தன்னம்பிக்கை கொண்டிருந்தவர்களுமான ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாக உள்ளது. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல்கள் எதையும் செய்ய முடியாது. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பிவந்து சேர்ந்துவிடும். உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்க கூடாது. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை. சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக சமுதாயத்தில் அனைவரும் விளங்க வேண்டும். வாழ்க்கையில் முழுமையாக வெற்றிப்பெற உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. பிறருக்காகச் சேவை செய்யும் போது தான், நீ சமுதாயத்தில் மிகச் சிறப்பாக வேலை செய்ய முடியும். மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி, அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டியுள்ளது. உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்தொடர்ந்து சென்றால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறமுடியும்.
துக்கங்களும், கஷ்டங்களும் சிலநேரங்களில் ஏற்படுவது நம்முடைய இயற்கை குணங்களைப் பலப்படுத்த நடத்தப்படும் தேர்வுகளாகும், இவற்றை கடந்து செல்ல நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நீ உன்னை பலவீனன் என்று ஒரு போதும் கூறாதே, எழுந்து நில், தைரியமாக இரு, வலிமையுடன் இரு, பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள், உன்விதியைப் படைப்பவன் நீயே என்பதை அறிந்து கொள். உனக்குத் தேவையான அனைத்து வலிமையும் உதவியும் உனக்குள்ளே குடிகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னிடம் நம்பிக்கை வைக்க வேண்டும், என்னால் முடியாது என்று ஒரு போதும் கூறகூடாது. நீங்கள் வரம்பில்லா வலிமை பெற்றவர்கள். அனைத்தையும் சாதிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதை முழுமையாக நம்ப வேண்டும். கருணை, அன்பு, இரக்கம் ஆகியவற்றை செயல்படுத்த ஒரு வாய்ப்பு அளித்த இறைவனை வாழ்த்துங்கள், நீங்கள் உதவி செய்பவர்களை இறைவனாக எண்ணுங்கள், அவர்களிடம் நன்றி உடையவர்களாக இருங்கள், மனத்தூய்மை பெற்று பூரண நிலை அடைய இதுவே வழியாகும். நம்மிடம் உள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதாகும். வெற்றிபெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் கொண்டிருக்க வேண்டும். தொடர் முயற்சியில் ஈடுபடுபவன் எதையும் சாதித்து வெற்றிக்கனி பறிப்பது உறுதி.
- விவேகானந்தர்