பார்த்தசாரதி கோவிலில் திருப்பணி: ஐந்து நாட்கள் மூலவர் தரிசனம் ரத்து
சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவர் விமானத்தில் திருப்பணி நடப்பதால், நாளை முதல், ஐந்து நாட்களுக்கு, மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், மூலவராக, ருக்மணி தேவி சமேத வேங்கட கிருஷ்ணனும், உற்சவராக பார்த்தசாரதி பெருமாளும், சேவை சாதிக்கின்றனர். சமீபத்தில் ஏற்பட்ட, வர்தா புயல், தொடர் மழை காரணமாக, மூலவர் சன்னிதியின் ஆனந்த விமானத்தில், பழுது ஏற்பட்டது. இதையடுத்து, திருப்பணி மேற்கொள்ள, அறநிலையத்துறை உத்தேசித்துள்ளது.இதன் காரணமாக, பிப்., 4ம் தேதி முதல், 8ம் தேதி வரை, மூலவர் தரசினம் ரத்து செய்யப்படுகிறது. அதுவரை, உற்சவர் பார்த்தசாரதி பெருமாளை, கண்ணாடி அறையில், தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுஉள்ளது. பிப்., 9ம் தேதி முதல், மூலவர் தரிசனம் செய்யலாம்.இவ்வாறு அறநிலையத்துறை இணை ஆணையர் காவேரி அறிவித்துள்ளார்.