வரம் தருவாள் வரலட்சுமி
கந்தபுராணத்தில் சிவபெருமான் வரலட்சுமி விரதத்தின் மகிமையை எடுத்துக்கூறியுள்ளார். சுமங்கலி பாக்கியம் நிலைபெற, பெண்கள் ஆவணி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இவ்விரதத்தை மேற்கொள்வர். இந்த ஆண்டு, முன்னதாகவே, அம்பிகைக்குரிய ஆடிவெள்ளியில் வருவது கூடுதல் சிறப்பு. ஆகஸ்ட்12ல் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பச்சரிசியும், மாவிலையும், தேங்காயும் வைத்த பூரணகும்பத்தில் திருமகளை ஆவாஹனம் செய்ய வேண்டும். அதன்மேல் பிம்பம் என்னும் லட்சுமிதேவியின் முகத்தை அலங்காரம் செய்து பட்டுத்துணியால் அலங்கரிக்க வேண்டும். மங்கல சூத்திரம் என்னும் நோன்புக்கயிற்றினை அணிந்து கொள்ள வேண்டும். வழிபாட்டின் போது சுமங்கலிகளுக்கு மங்கலப்பொருட்களான மஞ்சள், குங்குமம், வஸ்திரம், பூக்களை தானமாகக் கொடுப்பது வழக்கம். மங்கலம் அருளும் லட்சுமி இவ்விரதத்தால் மகிழ்ந்து, தீர்க்க சுமங்கலியாய் வாழ வரம் தருவதுடன், வேண்டும் வரங்களையும் அருள்வதாக ஐதீகம்.