ஏழையாக இருந்தாலும் கோழையாக வாழாதே!
வழிபடும் கடவுளைத் தவிர, வேறு யாரிடமும், எந்த இடத்திலும் உன்மனம் செல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதே நீ செய்ய வேண்டிய மிகப் பெரிய சாதனையாகும். உலகில் உனக்குத் துணையாகக் கடவுள் ஒருவர் தான் உண்டு, அவரைத் தவிர இவ்வுலகில் உனக்குத் துணை வேறுயாருமில்லை என்று நீ உறுதியாக நம்பினால் தான் உனக்கு நன்மை உண்டாகும். உலகத்தை நாடகமாகப் பார்த்தால், உன்னிடத்திலுள்ள மந்த புத்தியும், அறியாமையும் ஒழிந்து அனைவரும் நல்லவர்களாகவே தோன்றுவர். மக்கள் உன்னை நல்லவன் அல்லது கெட்டவன் என்று போற்றுவதற்கும், தூற்றுவதற்கும் நீயே தான் காரணம். இதனை உணர்ந்து நல்லவனாக நடந்து கொள்வது நல்லது. ஏழையாக இருக்கலாம். ஆனால், கோழையாக இருக்கக்கூடாது. உறுதியான மன தைரியமும், அடக்க முடியாத பக்தியும், வைராக்கியமும் உள்ளவனுக்கு கடவுளின் திருவருள் சுரக்கும்.
உலகில் கடவுளை சத்தியமாக நம்பிவிட்டவன் இருக்குமிடம் சொர்க்கமாக மாறி விடுகிறது. பணிவாக இருப்பதுடன் அனைவரையும் வணங்கு. சிரத்தை உள்ளவனாக இரு. விசுவாசம் குறைவின்றி இருக்கட்டும். மகான்களையும், சாஸ்திரங்களையும் பூரணமாக நம்பினால் இந்த பிறவியிலேயே பேரின்பம் கிடைக்கும். உலகில் உள்ள ஒரே கடல்நீர் உலகம் முழுவதும் மழையாக பெய்வதைப் போல், உலகில் உள்ள ஒரே கடவுள் மக்களின் நன்மைக்காக பலகோடிஅவதாரமாக வந்து உலகை காக்கிறார். கவலைப்படாமல் இருக்க வேண்டுமானால் கடவுளைச் சத்தியமாக நம்பிவிட்டு, உனது செயல்களைத் திருந்தச் செய்துவரவேண்டும். அவ்வாறு நடந்தால் உன்னை அறியாமலே அச்சமும், ஆசையும் உன்னை அணுகாது. உள்ளத்தெளிவும், மன அமைதியும் நாசம் அடையாதவாறு ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வதே உனக்கு நீ செய்யும்
மாபெரும் ஒத்தாசையாகும். நல்ல பேனா இருந்தால் மட்டும் போதாது. பகுத்தறிவு உள்ளவன் கையில் பேனா இருந்தால் தான் நல்ல விஷயத்தை எழுத முடியும். பேனா தானே எழுதாது. அதைப்போல் நீ தானே இயங்க முடியாது. பேனாவை இயக்க நீ வேண்டும். உன்னை ஆட்டுவிக்கக் கடவுள் வேண்டும் என்பதை மறக்க கூடாது.
கடவுளுக்குப் பணிவிடை செய்வதாகவே நம்பி, முழு மனதுடன் பணிகளை செய்து முடிப்பவன், முற்றும் துறந்த முனிவர்கள் பெற்ற இன்பத்தைப் பெற்று பயனடைவான். கடவுளை வழிபடவே நீ பிறந்திருக்கிறாய். உனக்குக் கடவுள் கொடுத்து உள்ள தொழில் நீ கடவுளை மறக்காமலிருப்பதாகும். தங்கத்தைத் தேடாதே, மனத்தை மாசற்ற தங்கமாக மாற்றிக் கொள். தங்கப் பாத்திரத்தில் எது வைத்தாலும் கெட்டுப்போகாது. அதுபோல், உன் மனதையும் நீ தங்கமாக்கிக் கொண்டுவிடு. உன்னைக் கடவுளின் தொண்டனாக நீ நம்பிவிட்டால், உன் கவலைகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். கடவுளை நினைத்துக் கொண்டே உணவை சாப்பிட்டு வந்தால், நீ சாப்பிடுவது அனைத்தும் கடவுள் பிரசாதமாக மாறி உன் மனதை சுத்தம் செய்யும். எதிர்கால வாழ்வைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தற்போதிலிருந்து கடவுளை மறக்காமலிருந்தால், அனைவருடைய எதிர்காலமும் வலையில்லாமல் இருக்கும். கடவுளைச் சத்தியமாக நம்பும் கூட்டம் அதிகரிக்கும் அளவுக்கு, உலகமெங்கும் அறநெறி தழைத்தோங்கி, இவ்வுலகம் சொர்க்கமாகவே காட்சி கொடுக்கும். உடலில் ரத்த ஓட்டம் நன்கு இருக்கும்போது ஆரோக்கியமாக இருக்கலாம். ரத்தக்குறைவு தோன்றியவுடன் உடலும், உள்ளமும் பலவீனப்பட்டு எண்ணம் அனைத்தும் சீர் குலைந்து போகிறது. எனவே ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் போதே, நல்ல எண்ணத்தை கடைபிடித்து வாழுங்கள்.
-உஷார்ப்படுத்துகிறார் சாந்தானந்தர்