ஈரோடு மாவட்டத்தில், முருகன் கோவில்களில் தைப்பூச விழா நேற்று களை கட்டியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஈரோட்டில் பிரசித்தி பெற்ற, திண்டல் வேலாயுதசுவாமி கோவிலுக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், பால்குடம் சுமந்து ஊர்வலம் சென்றனர். படி வழியாகவும், மலைப்பாதை வழியாகவும் பலர் கோவிலுக்கு சென்றனர். முருகனுக்கு பாலாபிேஷகம் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார்.*கோபி, பச்சமலை முருகன் கோவிலில், காலை 7:00 மணிக்கு மகன்யாச அபிேஷகம் நடந்தது. அதையடுத்து திருப்படித்திருவிழா, காவடி அபிேஷகம், 108 பால்குட அபிேஷகம் நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், மகன்யாச அபிேஷகம், பால்குட அபிேஷகம், யாகசாலை பூஜை, திரவ்ய ேஹாமம், மகா தீபாராதனை நடந்தது.*அந்தியூர் தேர்வீதி சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு, பால்குடம், தீர்த்தகுடம், மற்றும் காவடி எடுத்துக் கொண்டு நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சுப்ரமணியர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவு, 7:௦௦ மணிக்கு திருவீதி உலா நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் நடந்தது.*தைப்பூசத்தை முன்னிட்டு, சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதி சிக்கரசம்பாளையம், அரசூர், இண்டியம்பாளையம், அரியப்பம்பளையம் உட்பட, 10க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர். இவர்கள் நாளை மாலை சிவன்மலையும், நாளை மறுநாள் பழநி சென்றடைவர்.*சிவன்மலை, பழநி, சென்னிமலை உள்ளிட்ட கோவில்களுக்கு தீர்த்தம் எடுத்துச் செல்ல, ஏராளமான பக்தர்கள் கொடுமுடிக்கு நேற்று வந்தனர். காவிரியில் தீர்த்தம் எடுத்து, சென்றனர். அதிகாலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். இதனால் கொடுமுடியில் கூட்டம் களை கட்டியது. அதேசமயம் கொடுமுடியில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு, கபிலர்மலைக்கு பாதயாத்திரை சென்றனர். தைப்பூச விழாவில், முருகப்பெருமானை வழிபட பக்தர்கள் குவிந்ததால், கோவில்கள் களை கட்டின. -நமது நிருபர்கள்-