குமரி முதல் அயோத்தி வரை மழை வேண்டி பாதயாத்திரை
விருதுநகர்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்கவும், மழை வேண்டியும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த துறவி ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி முதல் அயோத்தி வரை பாதயாத்திரை செல்கிறார். விருதுநகர் அருப்புகோட்டை வட்டம் விளாத்திகுளம் அருகே குமாராபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 54. இவர் கடந்த 15 ஆண்டுகளாக துறவி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தமிழகத்தில் கடந்த இரு ஆண்டாக பருவமழை ஏமாற்றியதால், வறட்சி ஏற்பட்டு, விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாததால் ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனமும் போதிய அளவு கைகொடுக்கவில்லை. வறட்சியால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி நீங்கி, மழை பெய்து, பூமி செழிக்க கன்னியாகுமரி முதல் அயோத்தி வரை ராதாகிருஷ்ணன் பாதயாத்திரை செல்கிறார்.
அவர் கூறுகையில், “கடந்த ஜனவரி 19ல் பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் துவங்கி திருசெந்துார் சென்று, திருநெல்வேலி வழியாக 23 நாட்கள் நடந்து விருதுநகர் வந்துள்ளேன். மதுரை, திருச்சி, விழுப்புரம், திருப்பதி என சென்று அயோத்தியில் முடிக்க வுள்ளேன். சுமார் நான்கு மாதங்கள் ஆகலாம். மழை வேண்டி நாட்டு மக்களுக்காக பாதயாத்திரை செல்கிறேன்” என்றார்.