செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் அர்ச்சகர் சஸ்பெண்ட்:
திருவண்ணாமலை: செய்யாறு, வேதபுரீஸ்வரர் கோவில் அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர், கோவிலை பூட்டி சாவியை எடுத்துச் சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனில், வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பகுதி நேர அர்ச்சகராக கந்தசாமி, 34, என்பவர், 2010 முதல் பணியாற்றி வருகிறார். கோவில் நடை திறக்க தாமதப்படுத்துவது உள்பட, 13 காரணங்களை காட்டி, கோவில் செயல் அலுவலர் உமேஷ்குமார், கடந்த, 9ல் கந்தசாமியை சஸ்பெண்ட் செய்தார். அதற்கான உத்தரவை வாங்க கந்தசாமி மறுத்தார். அதனால், தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, கோவில் செயல் அலுவலர் உமேஷ்குமார், அர்ச்சகர் கந்தசாமியிடம் கோவில் சாவியை கேட்டார். நேற்று முன்தினம், உச்சி கால பூஜை நடத்திய அர்ச்சகர் கந்தசாமி, கோவில் சாவியை கொடுக்க மறுத்து, கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். பின், மாலை சாயரட்சை பூஜை நடத்த, சரவணன் என்ற அர்ச்சகரை நியமித்து, வி.ஏ.ஓ., உள்பட, 15 பேர் முன்னிலையில் கோவில் பூட்டை உடைத்து, பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது புதிதாக அர்ச்சகர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கந்தசாமியின் உறவினர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் கோவிலை முற்றுகையிட்டனர். தொடர்ந்து செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோவில் சார்பில் நியமிக்கப்பட்ட அர்ச்சகரை தொந்தரவு செய்யக் கூடாது என, அறிவுறுத்தினர். பின், போலீஸ் பாதுகாப்புடன் சாயரட்சை பூஜை நடந்தது. தன்னை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக, ராஜேந்திரன், வெங்கையன், ரமேஷ் ஆகியோர் மீது, செய்யாறு போலீசில், கோவில் செயல் அலுவலர் உமேஷ்குமார் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.