பழநியில் எடப்பாடி பக்தர்களுக்கு 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிப்பு!
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு எடப்பாடி பர்வதராஜ குலமகாஜன பக்தர்கள் (பிப்.16) இரவு மலைக்கோயிலில் தங்கி வழிபடுகின்றனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்க 20 ஆயிரம் கிலோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பர்வதராஜ குல சமுதாயத்தினர் பலநுõறு ஆண்டுகளாக மாலையணிந்து, விரதம் மேற்கொண்டு, காவடிகள் எடுத்து பழநிக்கு பாதயாத்திரை வருகின்றனர். அவர்கள் மலைக்கோயிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.
பாரம்பரிய காவடி பூஜை: இவ்வாண்டு வழிபாட்டிற்காக பிப்., 8ல் இளநீர் காவடி, பால்காவடி, புஷ்பகாவடி, சர்க்கரை காவடி எடுத்து, ஆட்டம் பாட்டத்துடன், புதுப்பேட்டை, எடப்பாடி, கல்லம்பாளையம், ஈரோடு, சேலம் அம்மாபேட்டை, சென்னிமலை, காங்கேயம், காரைக்கிணறு, தாராபுரம், மானூர் ஆற்றுப்பாலத்தில் காவடி பூஜை செய்தனர். (பிப்.,16ல்) பழநி மானூர் சண்முகநதியில் கும்பகோணம் காவடிகளுடன் ஒன்றுசேர்ந்து நீராடிய பின் மலைக்கோயிலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக வழிபாட்டுக் குழுவினர் மூலம் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் 20 ஆயிரம் கிலோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம்: இதற்காக 10 டன் மலை வாழைப்பழம், 3 டன் பேரீச்சம்பழம், 15 மூடை கற்கண்டு, 8 டன் சர்க்கரை மூடைகள், 12 டின்களில் தேன், நெய் மற்றும் 7 கிலோ ஏலக்காய் ஆகியவற்றைக் கொண்டு 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க உள்ளனர். இன்று மலைக்கோயிலில் சாயராட்சை கட்டளை பூஜை, ராஜஅலங்காரம், தங்கரதம், இரவு 8 மணிக்கு ராக்காலகட்டளை பூஜையில் சுவாமிதரிசனம் செய்தபின், பல ஆயிரம் பேர் குடும்பத்துடன் மலைக்கோயிலில் தங்குகின்றனர்.