உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலைக்கு விரைவில் வருகிறது ரோப்கார் வசதி

மருதமலைக்கு விரைவில் வருகிறது ரோப்கார் வசதி

மருதமலை: முருகனின் ஏழாவது படை வீடாக போற்றப்படும், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு விரைவில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது; அதற்கான திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கொங்கு மண்டலத்திலுள்ள ஆன்மிக தலங்களுள் முக்கியமானது, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு மருதாசலமூர்த்தி, சுப்ரமணியசுவாமியாக அருள் பாலித்து வருகிறார். பக்தர்கள் இந்த தலத்தை முருகனின் ஏழாவது படை வீடாக போற்றி வழிபடுகின்றனர்.

2000 பக்தர்கள்...: கடந்த, 30 ஆண்டுகளுக்கு, முன்பு, கோவை வடவள்ளியிலுள்ள, பெருமாள் கோவிலின் உபகோவிலாக மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் இருந்தது. முதலில் செயல்அலுவலர் அந்தஸ்துக்கும், படிப்படியாக உதவி கமிஷனர் அந்தஸ்துக்கும் உயர்த்தப்பட்டது. தற்போது துணை கமிஷனர் அந்தஸ்துக்கு உயர்ந்து நிற்கிறது. நாளொன்றுக்கு. இரண்டாயிரம் பக்தர்களும், விழா காலங்களில் பத்தாயிரம் பக்தர்களும் சுவாமியை வழிபாடு செய்கின்றனர். ஆண்டுக்கு பத்து கோடி ரூபாயை ஈட்டும் மிகப்பெரிய கோவிலாக பிரம்மாண்டமாக நிமிர்ந்து நிற்கிறது. இக்கோவிலில் அன்றாடம் மூன்று காலபூஜைகளும், கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி, தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, உள்ளிட்ட நாட்களில் ஒவ்வொரு கால பூஜையிலும் சுவாமிக்கு சகலவித திரவியங்களில் அபிஷேகம் நடைபெறுகிறது. அன்றாடம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக அறநிலையத்துறை, குடிநீர், தங்குமிடம், பக்தர்கள் இளைப்பாருமிடம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மருதமலை அடிவாரத்திலிருந்து, 2,000 எண்ணிக்கை கொண்ட படிக்கட்டுப்பாதை வழியாகவும், மூன்று கி.மீ., தொலைவு கொண்ட மலைப்பாதையில் சிற்றுந்து வாயிலாக பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். விழா நாட்களில் சிற்றுந்து வழியாகவும், படிக்கட்டு வாயிலாக மலைக்கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

பத்து கோடி ரூபாய்!

பக்தர்களின் வசதிக்காக, அறநிலையத்துறை, பத்து கோடி செலவில், ரோப்கார் வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. மருதமலையில் ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் சமீபத்தில் அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி தலைமையில், பொறியாளர்கள் மேற்கொண்டனர். அதில் மலைப்பாதை வழியாக சிற்றுந்தில் செல்வதற்கு மூன்று கி.மீ., தொலைவு கடக்க வேண்டும். ரோப்கார் அமைத்தால், ஒரே கி.மீ., தொலைவில், சுவாமி சன்னிதானத்திற்கு அருகேயே, இரண்டே நிமிடங்களில் சென்று விடலாம் என்று பொறியாளர்கள் கமிஷனரிடம் தெரிவித்தனர். இதையடுத்து மருதமலையில் ரோப்கார் அமைப்பதற்கான, சாத்தியக்கூறு ஆய்வுகளை நிறைவடைந்த நிலையில், திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணியில், அறநிலையத்துறை பொறியாளர்கள் இறங்கியுள்ளனர். பழநியில் இருப்பதை போன்று, ஒரே இயக்கத்தில், இரண்டு ரோப்கார்களை வடிவமைக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

சுற்றுலா தலமாகும்! இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவையை பறைசாற்றும் அடையாளங்களில் மிக முக்கியமானது மருதமலைக்கோவில். கோவிலிற்கு அன்றாடம் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வருவாயும் பத்து கோடியை தாண்டிவிட்டது. பக்தர்கள் மனமுவந்து கோவிலில் மேற்கொள்ளப்படும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவடைந்து, திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதிக பட்சமாக பத்துகோடிவரை செலவாகும் என்று அறநிலையத்துறை பொறியாளர்கள் கூறுகின்றனர். முழுமையாக திட்டமதிப்பீடு தயாரித்த பின்னரே தெரிய வரும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர். மருதமலை கோவிலில் ரோப் கார் அமைக்கும்பட்சத்தில், ஆன்மிகத்தலமாகவுள்ள இந்த மலைக் கோவில், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநில மக்களையும் ஈர்க்கும் சுற்றுலாத்தலமாகவும் மாறுமென எதிர்பார்க்கலாம்.

பயணிக்க ரூ.20 கட்டணம்: அடிவாரத்திலிருந்து மருதமலைக்கு சிற்றுந்தில் செல்வதற்கு பத்து ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மொத்தம், ஐந்து சிற்றுந்துகள் பக்தர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல், 20 நிமிடத்துக்கு ஒரு முறை சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ரோப்கார் அமைக்கப்பட்டால், அதற்கு, 15 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். பக்தர்களிடம் கருத்துக்கேட்டு அதன் பின்பே கட்டணம் முடிவு செய்யப்படும் என்றனர்.

அனுவாவிக்கு மலைப்பாதை!

மருதமலையைப்போல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான சின்னதடாகத்தில் அமைந்துள்ள, அனுவாவி சுப்ரமணியர் கோவிலை மேம்படுத்தவும் அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தற்போது படிக்கட்டு வழிப்பாதையில் மட்டுமே இந்த மலைக்கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர முடியும். இக்கோவிலுக்கு மலைப்பாதையை அமைக்க, அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக வனத்துறையிடம் அனுமதி கோரியுள்ளது. ஆனால், வனத்துறை அனுமதி கிடைப்பது, அத்தனை எளிதான விஷயமில்லை. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !