பழநியில் திரண்ட இடைப்பாடி பக்தர்கள்: மலைக்கோயிலில் தங்கி வழிபாடு
பழநி: இடைப்பாடி பர்வதராஜகுல சமுதாயத்தினர் பல ஆயிரம் பேர் காவடிகளுடன் பழநி மலைக்கோயிலில் தங்கி வழிபட்டனர்.
பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த பலஆயிரம் பர்வதராஜகுல சமுதாயத்தினர் பாதயாத்திரையாக ஆண்டுதோறும் பழநி வருவர். இந்தாண்டும் நேற்று மயில், இளநீர் காவடிகளுடன் மானுார் சண்முகநதி ஆற்றில் ஒன்றுகூடி, காலை 8:00 மணிக்கு காவடிகளுக்கு பூஜை செய்தனர். நண்பகலில் பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை 11:00 மணிக்கு பழநி வந்தடைந்தனர்.
மலைக்கோயில் தங்கிவழிபாடு: பழநி மலைக்கோயிலில் மாலை 3:00 மணிக்குமேல் காவடிகள் முத்திரை செலுத்தி தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். இடைப்பாடி பர்வதராஜகுல மகாஜன காவடி கமிட்டியினர் சார்பில் உச்சிகால அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக் குழுவினர் படிகளில் சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் வெளிப் பிரகாரத்தில் மல்லிகை, செவ்வந்தி, ரோஜா, அரளி, தாமரை உள்ளிட்ட வண்ணப் பூக்களால் ரங்கோலி வரைந்தனர். மாலை 5.30 மணிக்கு சாயரட்ச பூஜை, ராஜஅலங்கார முருகன், தங்கரதத்தில் சின்னக்குமாரர் தரிசனம் ஆகியவை முடித்து, இரவு இராக்கால கட்டளை பூஜையில் சுவாமி தரிசனம் செய்தனர். பின் நேற்றிரவு முழுவதும் மலைக்கோயிலில் தங்கினர், பஞ்சாமிர்தம் பக்தர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.