மண்டைக்காடு திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுமா?
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.
இக்கோவில் மாசி திருவிழா, பிப்., 26 முதல் மார்ச் 7 வரை நடக்கிறது. ரயிலில் வரும் பக்தர்கள், இரணியல் நிலையத்தில் இறங்கி, பேருந்தில் மண்டைக்காடு செல்லலாம். அதற்கேற்ப, சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கன்னியாகுமரி மாவட்ட, ரயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:மண்டைக்காடு கோவில் விழாவிற்காக, தமிழகம் மட்டுமின்றி கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் இருந்தும் அதிக பக்தர்கள் வருவர். எனவே, கொல்லம் நாகர்கோவில் இடையே, பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும். திருவிழா நாட்களில், இந்த வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்,
இரணியல் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.