கஞ்சமலை சித்தேஸ்வரன் கோவில் புனரமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
சேலம்: கஞ்சமலை கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ள, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம், கஞ்சமலை அடிவாரத்தில், பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரன் கோவில், 800 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 18 சித்தர்களில் ஒருவரான காளங்கி, இங்கு, தியான கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிலை, 2 அந்தஸ்து கொண்ட கோவிலுக்கு, பக்தர்கள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் வழிபட வசதியாக, கோவிலை புனரமைக்கவும், மராமத்து பணி மேற்கொள்ளவும், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி உத்தரவிட்டுள்ளார். அதில், கோவில் மேல்தளத்தில், மழைநீர் கசிவை தடுத்தல், தரைதளம், தூண்கள் ஆகியவை புனரமைத்தல், தடுப்புச்சுவர் எழுப்பி கதவு அமைத்து, பாதுகாப்பை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பணி நிறைவடைந்ததும், மீண்டும் நிதி பெற்று, அடுத்தகட்ட பணி செய்யப்படும் என, அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.