பழங்கால கோவில்களுக்கு... புத்துயிர்! சிறப்புகள் மீண்டு வருமா?
உடுமலை: உடுமலை பகுதியிலுள்ள, பழங்கால கோவில்களை அவற்றின் தொன்மை மாறாமல் புனரமைக்க, தொல்லியல்துறையின், தொழில்நுட்ப கருத்துரு இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் துவங்கினால், சிதிலமடைந்த கோவில்கள் மீண்டும் சிறப்பு பெறும் வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி படுகை மற்றும் குடிமங்கலம் பகுதியில், பல நுாற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, கோவில்கள் அதிகளவு உள்ளன. சிறப்பு பெற்றிருந்த பழங்கால கோவில்கள் போதிய பராமரிப்பின்றி, சிதிலமடைய துவங்கின. மானியமாக அளிக்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதனால், கோவில்களுக்கு வருவாய் குறைந்து, குறித்த காலத்தில், கும்பாபிேஷகம் உட்பட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், பொலிவிழக்க துவங்கின.
புதுப்பிக்க சிக்கல்: கற்களை மட்டுமே கொண்டு, சிறப்பாக கட்டப்பட்ட கற்றளி அமைப்பிலான கோவில்களும், மழை நீர் உட்புகுதல் போன்ற காரணங்களால், மேற்புறத்தில் விரிசல் ஏற்பட்டன. கோபுரங்களில், வளர்ந்த மரங்களால், அதிலுள்ள சிற்பங்கள் பாதிக்கப்பட்டன. பல்வேறு கோவில்களின் முன்மண்டப துாண்கள் விரிசல் விட்டன. சில கோவில்களை கிராம மக்கள் தாங்களாகவே புதுப்பிக்க முன்வந்தனர். இருப்பினும், கோவிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள், புனரமைப்பு பணிகளின் போது பாதிக்கப்படும் நிலை இருந்தது.
தொழில்நுட்ப கருத்துரு: பழங்கால கோவில்களின் தொன்மை மாறாமல், அவற்றை புதுப்பிக்க இந்து அறநிலையத்துறை, புதிய திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி, தொல்லியல் துறை சார்பில் கோவில்களில், ஆய்வு நடத்தப்பட்டு, புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப கருத்துரு இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அதன்படி, புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்வதால், கல்வெட்டு மற்றும் சிற்பங்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. அவற்றின் பழமையும் பாதுகாக்கப்படும்.
கோவில்கள் தேர்வு: திருப்பூர் மாவட்டம், சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் மற்றும் கொழுமம் வரதராஜ பெருமாள் கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி, தொழில்நுட்ப கருத்துருவை இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். இக்கருத்துருவில், கோவில் கட்டப்பட்ட ஆண்டு, அவற்றின் கட்டுமான சிறப்பு, புதுப்பிப்பு பணிகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்து அறநிலையத்துறையினர் கூறியதாவது: பழமையான சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன், கொழுமம் வரதராஜ பெருமாள் கோவில்களை புனரமைக்க, துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகளை, 14 வது நிதி ஆணைய நிதி ஒதுக்கீட்டில், மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தொல்லியல் வல்லுனர்கள், கோவிலில் ஆய்வு மேற்கொண்டு, தொன்மை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அறிக்கை அடிப்படையில், கல்கட்டுமானமாக உள்ள கோவில், முழுவதுமாக பிரித்தெடுக்கப்பட்டு, விரிவான முறையில், முழுமையாக திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில், பழங்கால கோவில்கள் பராமரிப்பு குறித்த பொது நல வழக்கு நடக்கிறது. இது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, அடுத்தகட்ட பணிகள் துவங்கும். இவ்வாறு, அறநிலையத்துறையினர் கூறினர்.