உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் ரத வீதிகளில் கட்டுப்பாடு தற்போதைய நடைமுறை தொடரும்

ராமேஸ்வரம் கோயில் ரத வீதிகளில் கட்டுப்பாடு தற்போதைய நடைமுறை தொடரும்

ராமநாதபுரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தற்போதைய நடைமுறை தொடரும் என எஸ்.பி., மணி வண்ணன் கூறினார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக வாகனங்கள் செல்லவும், நிறுத்தி வைக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி., மணி வண்ணன் கூறியதாவது: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத வீதிகளில் உள்ள விடுதிகள், சத்திரங்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக கோயில், நகராட்சி நிர்வாகம் சார்பில் குறைந்த வாடகையில் பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது. கோயிலை சுற்றி கூடுதல் பாதுகாப்பிற்கு சிறப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களிடம் போலீசார் பணம் பறிப்பதாக புகார் அளித்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சுவாமி வீதியுலாவின்போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு ரத வீதிகளில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரத வீதிகளில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் அனுமதிக்கப் படுகிறது. முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் கோயிலை சுற்றி வர சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. நான்கு ரத வீதிகளில் வசிப்போர் வைத்துள்ள வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறை தொடரும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !