திருத்தணி முருகன் கோவிலில் அடாவடி வசூல்
திருத்தணி: முருகன் மலைக்கோவிலில், பக்தர்களிடம் மொட்டை அடிக்கவும், இலவச குளியலறைக்கு கட்டாய வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள், தங்களது வேண்டுதலை
நிறைவேற்ற, மொட்டை அடிக்கின்றனர்.
இதற்காக, மலையடிவாரத்தில் நாகவேடு சத்திரம், திருக்குளம், சன்னிதி தெரு மற்றும் மலைக்கோவில் ஆகிய நான்கு இடங்களில், தேவஸ்தானம் சார்பில், முடி காணிக்கை மண்டபம் அமைத்து மொட்டை அடிக்கப்படுகிறது; அதற்கான பணியில், 54 ஊழியர்கள் இருக்கின்றனர். மலைக்கோவிலில் மட்டும், 16 பேர் மொட்டை அடிக்கின்றனர். தேவஸ்தானம் சார்பில் விற்கப்படும், 30 ரூபாய் டிக்கெட்டை வாங்கி வரும் பக்தர்களிடம், மேற்கொண்டு, 30 ரூபாயை ஊழியர்கள் கட்டாயமாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, மலைக்கோவிலில் தான் இந்த பிரச்னை அதிகளவு நடப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பக்தர்கள் சிலர் கூறியதாவது: தேவஸ்தான டிக்கெட் வாங்கியும், மொட்டை அடிக்கும் ஊழியர்கள், மேற்கொண்டு பணம் கேட்கின்றனர். அவர்கள் கேட்டு தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், தரக்குறைவாக பேசுகின்றனர். மேலும், இலவச குளியல் அறைக்கு, நபர் ஒருவருக்கு, 10 ரூபாய் வீதம் வாங்குகின்றனர். அதே போல், மலைக்கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களை வழி மறிக்கும் சில புரோக்கர்கள், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மொட்டை அடிக்கும் பக்தர்களிடம் கட்டாய வசூல் செய்யக்கூடாது என்பதற்காக, ஒரு தலைக்கு, 25 ரூபாய் கோவில் நிர்வாகம் மூலம்
தரப்படுகிறது. மொட்டை அடிக்கும் ஊழியர்கள் இனி கண்காணிக்கப்படுவர். அதே போல், இலவச குளியல் மற்றும் கழிப்பறையில் யாரும் பணம் தரவேண்டிய அவசியம் இல்லை. சிறப்பு தரிசனம் செய்வதாக கூறி மலைக்கோவிலில் சுற்றிவரும் புரோக்கர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது போலீசில் புகார் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில் அலுவலர் ஒருவர், திருத்தணி.