தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
புன்செய்புளியம்பட்டி: சிவராத்திரியை முன்னிட்டு, தலையில் தேங்காய் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பவானிசாகர் அடுத்த, விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி அய்யம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு தொட்டம்மா, சின்னம்மா மற்றும் மகாலட்சுமி கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும், மஹா சிவராத்திரி விழா, இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பிப்24, மாலை, 5:30 மணியளவில், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து, விழா தொடங்கியது. இதில், கிராமத்தை சேர்ந்த குரும்பர் இன மக்கள், தேங்காயை தலையில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக இரவு, 8:00 மணியளவில் கோவிலுக்கு வந்தனர். மீண்டும் இரவு, 11:00 மணிக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துதலும், அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடந்தன. விழாவில், கோவை மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர், கலந்துகொண்டனர். விவசாயம் செழிக்க, கால்நடைகள் நோயின்றி வாழ, மழை பெய்ய, தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது ஐதீகம் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.