மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா துவங்கியது
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா பிப்24, துவங்கியது. தொடர்ந்து ஒரு வாரம் திருவிழா நடைபெறும். இதில் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர். அவர்கள் ஏராளமான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
விழாக்காலங்களில் கோயிலில் கடைகள் நடத்துவதற்கு இடம் வாடகை, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்வதற்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதற்காக வசூல் உரிமை தனியாருக்கு ஏலம் விடப்படுகிறது. நான்கு சக்கர வானகங்களுக்கு 50 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால் ஏலம் எடுத்தவர்கள் தங்கள் இஷ்டம் போல் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். அதுகுறித்து கேட்டால் மிரட்டுவதாக புகார் உள்ளது. கடந்தாண்டும் இதே பிரச்னை ஏற்பட்டதால் கோயில் நிர்வாகம் சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. எனவே இதில் கோயில் நிர்வாகம், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.