தொன்போஸ்கோ திருவுருவம் வருகை :நாமக்கல்லில் தரிசனம்!
நாமக்கல்: கிறிஸ்துவர்களின் புனித தந்தை தொன்போஸ்கோவின் வலது கரத்துடன் கூடிய திருவுருவம், மக்களின் தரிசனத்துக்காக நாமக்கல் வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், மக்கள் தரிசனம் செய்தனர். இளைஞர்களின் புனித தந்தை தொன்போஸ்கோ, 1815ல் இத்தாலி நாட்டில் உள்ள பெக்கி என்ற சிற்றூரில் பிறந்தார். இரண்டு வயதில் தன் தந்தையை இழந்த அவர் அனாதையானார். தன்னைப்போன்ற ஆதரவற்ற அனாதைகளுக்கு அன்புக்கரம் நீட்டி அருள்வாழ்வு வழங்க தனது 26வது வயதில் துறவியானார்.
கல்வி மற்றும் தொழிற் கல்வி நிறுவனங்களை உருவாக்கி இளைஞர்களின் வாழ்வை வளம் பெறச்செய்தார். இளைஞர்களை நல்ல மனிதர்களாகவும், நேர்மையான குடிமக்களாகவும் மாற்றுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டார். தனக்கு பின் இத்தகைய பணி தொடர்ந்து நடக்கும் வகையில் சலேசிய சபையையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய சலேசிய சபையின் மூலம் உலகெங்கும் 131 நாடுகளில் உள்ள எண்ணற்ற மாணவர்களும், இளைஞர்களும் பயனடைந்து வாழ்வை மேம்படுத்தி வருகின்றனர். அவர், 1888ம் ஆண்டு தன், 78வது வயதில் காலமானார். அவர் இறந்த பின் அவரது வலது கரம் பாதுகாக்கப்பட்டு மெழுகினால் செய்யப்பட்டுள்ள அவரது உருவத்துடன் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வ்ருகிறது. தொன்போஸ்கோ பிறந்து, 200 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளதால், அவரது வலதுகரம் தாங்கிய திருவுருவம் உலகெங்கும், 133 நாடுகளில் உள்ள தொன்போஸ்கோ இல்லங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இளைஞர்களையும், மக்களையும், துறவிகளையும் ஆசீர்வதித்து வலம் வந்து கொண்டிருக்கிறது. மே மாதம் துவக்கத்தில் இந்தியாவுக்கு தொன்போஸ்கோவின் திருவுருவம் வருகை புரிந்தது. அதன்பின் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் சென்ற தொன்போஸ்கோவின் திருவுருவம் நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டியில் உள்ள தொன்போஸ்கோ அன்பு இல்லத்துக்கு வந்தது. அதிகாலை, 6 மணி முதல், 10 மணி வரை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், மக்கள் நீண்ட க்யூவில் நின்று புனித கரத்துடன் கூடிய அவரது திருவுருவத்தை வணங்கி ஆசீ பெற்றனர். அதை தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து கோவைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை என்.புதுப்பட்டி தொன்போஸ்கோ அன்பு இல்ல நிர்வாகிகள் ஜார்ஜ் ஜோசப், டொமினிக், எஸ்.எஸ்.அக்ரோ டெக் நிர்வாக இயக்குனர் ரெக்ஸ் கிறிஸ்டி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
சென்னை வருகை: 31ம் தேதி சென்னை கொண்டு வரப்படும், தொன் போஸ்கோவின் உடலை மக்கள் பார்வையிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, என, புனித பீட்ஸ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரோகரி கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இத்தாலியில் பிறந்த தொன் போஸ்கோ, ஏழை மாணவ, மாணவியரின் கல்விக்காக பல நிறுவனங்களை தோற்றுவித்துள்ளார். அவரின் 200வது பிறந்த நாள், 2015ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இறந்து 123 ஆண்டுகளாகியும் சிதைவுறாத வலது கரம், மெழுகால் வடிவமைக்கப்பட்ட அவரது உடலில் வைக்கப்பட்டு, 138 நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் தற்போது சென்னை வருகிறது. வரும் 31ம் தேதி மாலை, புனித பீட்ஸ் பள்ளிக்கு வரும் இந்த உடல், மறுநாள் காலை, 10 மணிக்கு பேசின் பிரிட்ஜ் தொன் போஸ்கோ மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலை மக்கள் பார்வையிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நவ., 17ம் தேதி வரை இருக்கும் அவரது உடல், பின் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கிரோகரி கூறினார்.