காரைக்கால் சனி பகவான் கோவிலில் எள் தீபம் ஏற்றி ரங்கசாமி வழிபாடு
காரைக்கால் : முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேற்று திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு, நேற்று மதியம் 1.20 மணிக்கு நடை சாத்துவதற்கு முன்பு, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, 15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென வந்தார். கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சால்வை அணிவித்து அவரை வரவேற்றனர். முன்னாள் முதல்வர் ரங்கசாமி தர்பாரண்யேஸ்வரர், முருகன், விநாயகர், அம்பாள், நடராஜர் சுவாமிகளை தரிசனம் செய்தார். பின்னர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 68 எள் தீபம் ஏற்றி ரங்கசாமி, சுவாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி முதல்வராக இருந்த போது ரங்கசாமி ஒரு முறை திருநள்ளார் கோவிலுக்கு வந்தார். அதன் பின்னர் ௧௫ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென வந்தார். அவருடன் கட்சி பிரமுகர்கள் யாரும் வரவில்லை. அவரின் திடீர் வருகை குறித்து கேட்ட போது ’சிவன் அழைத்ததால் வந்தேன்’ என கூறி சென்றார்.