செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் தினசரி பூஜை நடக்குமா?
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், தினசரி பூஜை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் ராமானுஜருக்கு தனி சன்னிதி உள்ளது. அந்த இடத்தில் வரதராஜப்பெருமாள், பெருந்தேவி தாயார், அவருக்கு காட்சி அளித்த இடமாக கருதப்படுகிறது. ஆண்டு தோறும் ஜனவரி மாதம் அந்த கோவிலுக்கு வரதராஜப்பெருமாள், அனுஷ்டான குளம் உற்சவத்தின் போது எழுந்தருள்வார். மாதம் அவருடை பிறந்த நட்சத்திரமான திருவாதிரை அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. வரதராஜப்பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலுக்கு, பிற வருமானம் கிடையாது. அதனால், கோவில் நிர்வாகம், இந்த கோவிலை கண்டுகொள்ளவில்லை என, பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சிதிலம் அடைந்து கிடந்த இந்தக் கோவில், சமீபத்தில் தான் சீரமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாதா மாதம் திருவாதிரை அன்று ராமானுஜருக்கு சிறப்பு பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்ய துவங்கினர். அந்த நடைமுறை இன்றும் தொடர்கிறது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அந்த நேரம் கோவில் பூட்டி இருப்பதால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தற்போதும் கோவிலை பக்தர்கள் சார்பில் பராமரிப்பு செய்து வருகின்றனர். அதனால், தினசரி பூஜை நடந்தால், பக்தர்கள் வழிபட வசதியாக இருக்கும் என, விருப்பம் தெரிவித்து உள்ளனர். ராமானுஜர், 1,000வது ஆண்டு விழாவில் அவரது தனி சன்னிதியில் தினசரி பூஜைக்கு, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். என, அவரது பக்தர்கள் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.