ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார், 77வது பிறந்த நாள் விழா, கடந்த, 28ல், கலச விளக்கு பூஜையுடன் துவங்கியது. நேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பங்காரு அடிகளார் முன்னிலையில் துவங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பாஸ்கரன், பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா மலரை வெளியிட, ஓய்வு பெற்ற நீதிபதி, ராஜேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.ராமேஸ்வரத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், தங்கும் விடுதியை, ஓய்வு பெற்ற நீதிபதி தணிகாசலம், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அதை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில், 10 அரசு பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உட்பட, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், பல நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. கணினிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம், தையல் இயந்திரம், சைக்கிள், மற்றும் 88 தொழிலாளர்களுக்கு காப்பீடுகள் என, 1,150 பக்தர்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பங்காரு அடிகளார் வழங்கினார்.