புனித அந்தோணியாரின் திருப்பண்டம்
கோவை: புனித அந்தோணியாரின் திருப்பண்டம், இத்தாலியிலிருந்து, நாளை கோவை கொண்டு வரப்படுகிறது.போர்ச்சுக்கலை சேர்ந்த அந்தோணியார், 12ம் நுாற்றாண்டில், கிறிஸ்தவ மத போதகராக பல நாடுகளில் பணியாற்றியவர். கத்தோலிக்க திருச்சபையால், புனிதராக அங்கீகரிக்கப்பட்டவர்களில் முன்னோடியாக கருதப்படுபவர். கோடி அற்புதர் என்று வர்ணிக்கப்படும் புனித அந்தோணியாரின் பெயரில், உலகம் முழுவதும் ஏராளமான கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளன. கத்தோலிக்க திருச்சபையால் அங்கீகரிக் கப்பட்ட புனிதரின் உடலின் ஒரு பகுதி அல்லது அவர் பயன்படுத்திய பொருட்களின் ஒரு பகுதி, திருப்பண்டம் என்றழைக்கப்படுகிறது. பல நுாற்றாண்டுகளுக்கு முன் இறந்த புனித அந்தோணியாரின் திருப்பண்டம், இத்தாலி நாட்டின் பதுவை நகரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.நாளை காலை, 8:00 மணிக்கு கோவைக்கு கொண்டு வரப்படும் திருப்பண்டம், நஞ்சுண்டாபுரத்திலிருந்து, பங்குத்தந்தை ஜான்சன் வீப்பாட்டுப்பரம்பில் தலைமையில் ஊர்வலமாக ராமநாதபுரம் டிரினிட்டி சர்ச் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு மதியம், 12.30 மணிக்கு புனிதரின் திருப்பண்டம், பொதுமக்களின் தரிசனத்துக்கும், வழிபாட்டுக்கும் வைக்கப்படுகிறது. அதன் பின், எட்டிமடை அசிசி சினேகாலயா ஆசிரமத்துக்கு புனித அந்தோணியாரின் திருப்பண்டம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இரவு, 7:00 மணிக்கு பொது தரிசனத்துக்கு வைக்கப்படுகிறது.