வயதைப் பற்றி கவலை வேண்டாம்!
ADDED :3144 days ago
திருநாவுக்கரசர் கைலாசத்தை தரிசிக்க விரும்பி புறப்பட்டார். அவரைச் சோதிக்க விரும்பிய சிவன், ஒரு முனிவர் வடிவில் தோன்றி, “ வயதான காலத்தில் உமக்கு ஏன் இந்த முயற்சி? திரும்பிச் செல்வது நல்லது,” என்று தடுத்தார். நாவுக்கரசர் துணிவுடன், “முதுமை வந்தது உண்மை என்றாலும், என் தலைவன் சிவபெருமானை தரிசிக்காமல் திரும்ப மாட்டேன்” என்று சொல்லி நடந்தார். வழியில் ஒரு பொய்கை இருந்தது. அதில் நாவுக்கரசரை மூழ்கும்படி அசரீரி ஒலித்தது. நாவுக்கரசரும் மூழ்க, திருவையாறு ஐயாறப்பர் குளத்தில் எழுந்தார். குளக்கரையில் சிவனின் கைலாய தரிசனம் தெரிந்தது. மனம் மகிழ்ந்த நாவுக்கரசர், “மாதர்பிறைக் கண்ணியானை...” என்று தொடங்கும் தேவாரத்தைப் பாடினார். இப்பாடலைப் பக்தியுடன் பாடுவோருக்கு கைலாயத்தை தரிசித்த புண்ணியம் உண்டாகும்.