திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா அவதார பதியில் அவதார தின விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி, வைகுண்டரை வணங்கினர்.
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதரித்த இடமாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர். அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, அன்ன தர்மம் நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, அன்ன தர்மம் நடந்தது. மாலை 5 மணிக்கு பணிவிடையை தொடர்ந்து புஷ்ப வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அன்ன தர்மம் நடந்தது. அவதார தினமான மார்.4ல் திருச்செந்தூர் கடற்கரையில் அய்யாவழி பக்தர்கள் ஆயிரக்கணக்கானேர் திரண்டிருந்தனர். அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம்பாடுதல் நிகழ்ச்சி நடந்தது. அய்யாவழி பக்தர்கள் கடலில் புனித நீராடினர். 6.50 மணிக்கு சூரிய உதயத்தின் போது ‛‛அய்யா சிவ சிவ அரகரா” கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அன்ன தர்மம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் செய்திருந்தனர்.