திருப்பரங்குன்றம் கோயிலில் சஷ்டி பக்தர்களுக்கு மண்டபம்: எதிர்பார்ப்பில் பக்தர்கள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்வதற்காக புதிய மண்டபம் கட்ட முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அறிவிப்பை, தற்போதைய முதல்வர் இடைப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கோயிலில் சஷ்டி திருவிழாவின் போது, திருப்பரங்குன்றம், மதுரை சுற்றியுள்ள கிராமங்கள், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் காப்பு கட்டி கோயில் மண்டபங்கள், வள்ளி, தேவசேனா மண்டபங்கள், கோயில் திறந்தவெளி வளாகங்களில் ஆறு நாட்கள் தங்கி விரதம் மேற்கொள்வர்.
பன்னீர் செல்வம் அறிவிப்பு: கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., பொறுப்பாளராக பணியாற்றிய அப்போதைய நிதி அமைச்சர் பன்னீர் செல்வம், அ.தி.மு.க., வின் வெற்றிக்காகவும், உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் வேண்டி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த வந்தார். அப்போது கோயில் மண்டபங்களில் பக்தர்கள் தங்கி இருப்பதையும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்தும் கோயில் நிர்வாகிகள், சிவாச்சார்யார்களிடம் கேட்டார். அவர்களின் விளக்கத்தில் திருப்தி அடையாத பன்னீர் செல்வம், இந்த அடிப்படை வசதிகள் போதாது, விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி இருப்பதால் தினம் கோயிலுக்குவரும் பக்தர்களுக்கு இடையூராக இருக்கும். எனவே சஷ்டி பக்தர்கள் தங்க அனைத்து வசதிகளுடன், அரசு சார்பில் புதிய மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என கூறினார். முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் அறிவிப்பை தற்போதைய முதல்வர் இடைப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு சஷ்டி திருவிழாவிற்குள் அப்பணிகள் முடிக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.