பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் மார்ச் 24ல் பூச்சொரிதல் விழா
பரமக்குடி;பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் பங்குனித் திருவிழா ஏப்., 2 ல் காலை கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. அன்று இரவு அம்மன் பூதகி வாகனத்தில், கரகாட்டம், ஓயிலாட்டம், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் வீதிவலம் நடக்கிறது. தொடர்ந்து அம்மன் பல்லக்கு, கேடயம், அன்னம், ரிஷபம், யானை, சிங்கம், கிளி, காமதேனு வாகனங்களில் வீதி உலா வருகிறார். மார்ச் 9 ல் குதிரை வாகனத்திலும், மறுநாள் காலை முதல் மாலை வரை அக்னிச்சட்டி ஊர்வலமும், இரவு 8 மணிக்கு மேல் அம்மன் மின்சார தீப ரதத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வருவார். மார்ச் 11 ல் அதிகாலை 4 மணிக்கு அம்மன் கள்ளர் திருக்கோலத்துடன், புஷ்பபல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். மார்ச் 12 அதிகாலை முதல் தொடர்ந்து 11 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அன்று இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் சயன திருக்கோலத்தில் வீதிவலம் நடக்கும்.முன்னதாக பங்குனி விழாவின் தொடக்கமாக மார்ச் 24ல் இரவு பூச்சொரிதல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.