திருமலையில் தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள்: பல மணி நேரம் காத்திருப்பு!
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை,தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர். நேற்றுமுன்தினம் (சனி) இரவு நிலவரப்படி, ஒன்றரை லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். தீபாவளி பண்டிகை, வார விடுமுறையையொட்டி, சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று தினங்களாக, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக, திருப்பதி, திருமலை பஸ் நிலையங்கள், ரயில் நிலைய பிளாட்பாரம் எங்கும், பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றனர். திருமலை கோவிலில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் அனைத்து வளாகங்களும் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியிலும் இலவச தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களின் வரிசை, ஒன்றரை கி.மீ., தூரத்திற்கு நீண்டுள்ளது. 300 ரூபாய் சிறப்பு தரிசன கியூவும், அரை கி.மீ., தூரத்திற்கும் அதிகமாக நீண்டுள்ளதால், இவர்களுக்கு சாமி தரிசனத்திற்கு, 4 மணி நேரம், இலவச தரிசனத்திற்கு தொடர்ந்து பல மணி நேரம், காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் கியூவும் நீண்டிருப்பதால், இங்கும் 4 மணி நேரம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்ஜித சேவா டிக்கெட் கவுன்டர்கள், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெறும் கவுன்டர் மற்றும் தங்கும் விடுதி பெறும் கவுன்டர்கள், லட்டு பிரசாதம் விற்பனை கவுன்டர்கள் அருகிலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கியூவில் நிற்பதைக் காண முடிந்தது.
வழக்கம்போல், தங்கும் விடுதிகள் கிடைக்காத பக்தர்கள், திருமலையின் சாலை ஓரங்களிலும், விடுதி வளாகங்களிலும் ஓய்வெடுத்து வருகின்றனர். கோவிலில், பக்தர்களின் துரித தரிசன வசதிக்காக, வெள்ளிக்கிழமை முதல் தொலை தூர தரிசனம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். சாமி தரிசனத்திற்காக, வைகுண்டம் வளாகங்களிலும், வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, குடிநீர், பால், உணவுப் பொட்டலங்களை தேவஸ்தான ஊழியர்கள் வழங்கி வருவதாக, துணை நிர்வாக அதிகாரி சினிவாச ராஜு தெரிவித்தார். லட்டு பற்றாக்குறை ஏற்படாதவாறு, முன்னெச்சரிக்கையாக குறைந்த அளவில் லட்டு டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்நிலை, நாளை பிற்பகல் வரை நீடிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த நவம்பர் மாதத்திற்கான, தோமாலை 153, அர்ச்சனை 184, வஸ்திர அலங்காரம் 14, அபிஷேகம் 42 போன்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை, பக்தர்கள் முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.