உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதாரம் தேடித்தவிக்கும் கோயில் அன்னதான திட்டம்!

ஆதாரம் தேடித்தவிக்கும் கோயில் அன்னதான திட்டம்!

பழநி:அன்னதானத்திற்கு நிதி ஆதாரத்தை அதிகரித்து திட்டம் சிறப்பாக செயல்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.அன்னதானத்தை, கோயில்களில் திட்டமாக மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. 2002 மார்ச் 23 ல் துவக்கப்பட்ட இத்திட்டம், முதற்கட்டமாக 63 கோயில்களில் செயல்பாட்டிற்கு வந்தது. படிப்படியாக அதிகரித்து, தற்போது 530 க்கும் மேற்பட்ட கோயில்களில் உணவு பரிமாறப்படுகிறது. திட்டத்தை விரிவுபடுத்திய அரசு, வருவாய் குறைந்த கோயில்களில்கூட தினமும் குறைந்தபட்சம் 50 பேருக்கு அன்னதானம் வழங்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட கோயில்களில் அன்னதான உண்டியல் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குறைந்தபட்ச மெனுவாக, சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், கூட்டு அல்லது பொறியல் இடம்பெற்றுள்ளது. இதற்கான செலவினம் உட்பட பல நடைமுறைச் சிக்கல்கள், திட்டத்தை சிறப்பாக்குவதில் தடைக்கற்களாக உள்ளன. உபரிநிதி மிக்க கோயில்களில் இருந்தும், அன்னதான மைய நிதியின் வட்டி, உபயதாரர்கள் மூலமும் இதற்கான நிதிச்சுமையை சமாளிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 50 பேருக்கு உணவளிக்க, அதிகபட்சமாக 700 ரூபாய் மட்டுமே செலவினத்திற்காக அனுமதிக்கப்படுகிறது. வாழை இலை முதல் ஊறுகாய் வரை, மார்க்கெட் விலை நிலவரம் காரணமாக, சாதாரண ஓட்டல்களிலும் ஒரு சாப்பாடு 30 ரூபாய்க்கு குறைவாக கிடைப்பதில்லை. இந்நிலையில், தலா ஒரு நபருக்கு அதிகபட்சமாக 14 ரூபாய்வரை மட்டுமே அரசு அனுமதிக்கிறது. மேலும், இத்தொகைக்குள் சமையல் பணியாளர்கள், எரிபொருள் போன்ற செலவினங்களையும் கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற சூழலில், வருவாய் ஆதாரம் குறைந்த கோயில்களில் முறைகேடு மட்டுமின்றி, பெயரளவில் மட்டுமே திட்டம் செயல்படும் அவல நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. நடைமுறைச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் அன்னதானத் திட்டத்தை, மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !