நெல்லையப்பர் கோயிலில் மேயர் ஆய்வு: பக்தர்களுக்கான வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை!
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என கோயிலில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட மேயர் விஜிலா சத்தியானந்த் கூறினார். நெல்லை மாநகராட்சி மேயரான விஜிலா சத்தியானந்த் நேற்று மாலை நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தார். அவரை கோயில் யானை காந்திமதி, மாலை அணிவித்து வரவேற்றது. கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கசன்காத்த பெருமாள் வரவேற்றார்.
நெல்லையப்பர் கோயிலுக்கு மாநகராட்சி மூலம் செய்யப்படவேண்டிய தேவைகள், கோயில் உட்தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகளில் அடைப்புக்கள், ஆக்ரமிப்புக்கள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ரதவீதிகளில் செய்யவேண்டிய சுகாதார வசதிகள், மழை பெய்தால் கோயிலுக்குள் தண்ணீர் தேங்குவதை வெளியேற்றுவது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வுப்பணிகள் முடிந்த பின் மேயர் விஜிலா சத்தியானந்த் கூறுகையில், "நெல்லையப்பர் கோயில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதனமானது. பாரம்பரியமான கோயிலில் சிற்பக் கலைகள் அற்புதமாக அமைந்துள்ளது. கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். வெளி மாநில, வெளிநாட்டு பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். மழைக் காலங்களில் கோயிலுக்கு மழைநீர் தேங்குவதால் பக்தர்களுக்கு இடையூறு, சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், மழைநீரை வெளியேற்றவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ரதவீதிகளையும், கோயில் பகுதிகளையும் சுகாதாரமாக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுள்ளனர். கோயில் உட்தெப்பக் குளத்திற்கு தண்ணீர் வரும் பாதைகளில் அடைப்புக்களை சரிசெய்து தண்ணீர் கொண்டு வரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். சுகாதார வசதிகள் செய்துதரவும், தெப்பத்திற்கு வையாபுரிநகர் பகுதியில் இருந்து தண்ணீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா மேம்பாட்டு நிதி மூலம் தேவையான உதவிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் ஆண்களுக்கு 5 கழிப்பிடங்களும், பெண்களுக்கு 5 கழிப்பிடமும் கட்டித் தரவேண்டும் என கோயில் நிர்வாகம் மற்றும் கல்சுரல் அகடமி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்தே அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதனை போனில் தொடர்பு கொண்டு மேயர் விஜிலா பேசினார். அறநிலையத்துறை அமைச்சரும் நெல்லையப்பர் கோயிலுக்கு அடுத்த வாரம் நேரில் வந்து ஆய்வு செய்து பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாக மேயர் விஜிலா தெரிவித்தார். மழைநீரை அகற்றவும், தெப்பத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். முன்னதாக கோயிலில் சுவாமி, அம்பாள் சன்னதிகளில் மேயர் மற்றும் குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டார். நிகழ்ச்சியில் உதவிக் கமிஷனர் கருப்பசாமி, இளநிலைப்பொறியாள் பாஸ்கர், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, கவுன்சிலர்கள் மோகன், சங்கர், மணிமாளிகை கணேஷ், நிர்வாகிகள் சுப்பிரமணியன், பிச்சையாபிள்ளை, காந்திமதிநாதன், முன்னாள் சேர்மன் வெங்கடசுப்பிரமணியன், சாத்தை நாராயணன், அருணகிரி பரமசிவன், சண்முகய்யா பாண்டியன், நெடுஞ்செழியன், ஜெயராமன், சங்கரபாண்டியன், தமிழ்செல்வி, பேச்சாளர் முருகன், ஆர்யா பாலு, சத்தியானந்த், சீனிவாசகன் மற்றும் கல்சுரல் அகடமி காசிவிஸ்வநாதன், சொனா வெங்கடாச்சலம், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.