காட்பாடி அருகே வள்ளிமலை தேரோட்டம்
வேலுார்: காட்பாடி அருகே வள்ளிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. பாடல் பெற்ற ஸ்தலமான வள்ளிமலை கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, 56 அடி உயரமுள்ள மரத்தேர் தேரோட்டம் நேற்று மாலை, 5:00 மணிக்கு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். இந்த தேர், வள்ளிமலையை, நான்கு நாட்கள் சுற்றி, வரும், 12 மாலை, 5:00 மணிக்கு நிலையை வந்தடையும். அதுவரை மலையை சுற்றி உள்ள பல பகுதிகளில், இரவு நேரத்தில் மட்டும் தேர் நிறுத்தப்படும்.
இந்த தேரோட்டத்தில், தமிழகம், ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேர் மீது, மிளகு, எலுமிச்சை, நவ தானியங்கள் ஆகியவற்றை பக்தர்கள் வீசி, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தேரோட்டத்தை முன்னிட்டு, வேலுார் மாவட்ட எஸ்.பி., பகலவன் தலைமையில், 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வேலுார், ராணிப்பேட்டை, சோளிங்கர், குடியாத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து, 100 தமிழ்நாடு அரசு சிறப்பு பஸ்களும், சித்துார், பலமனேர், திருப்பதியில் இருந்து, 40 ஆந்திரா மாநில சிறப்பு பஸ்களும், வரும், 12 வரை இயக்கப்படுகிறது.