சைதன்யமஹாபிரபு 531வது ஜெயந்தி விழா: ஆன்மிக சொற்பொழிவு
பெரியகுளம்; பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஸ்ரீ சைதன்யமஹாபிரபு 531வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மார்ச் 4 முதல் 12 வரை 90 மணி நேரம் ஹரே ராம நாமகீர்த்தனம், அன்னதானம் நடந்தது. குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில், கிருஷ்ணசைதன்யதாஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் பேசுகையில், “அனைவரும் இறைவனின் பெயரை உச்சரித்தால் அவரது அருளை பெறலாம் என சைதன்ய மஹாபிரபு தெரிவித்துள்ளார்.வேதம், புராணம், சாஸ்திரத்தின் சாரம் இறைவனின் பெயரை உச்சரிப்பதே ஆகும்.ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற இந்த மகாமந்திரத்தை நாடு, மதம், இனம், மொழி என எந்த வித்தியாசம் இல்லாமல், எல்லோரும் கூறலாம். இதை முரளீதரசுவாமிஜி வலியுறுத்தி உள்ளார். எனவே நாமும் தினமும் மந்திரத்தை 108 முறை கூறி இறைவனின் அருளால் எல்லாவிதமான கஷ்டங்களிலிருந்து விடுபட்டு, வாழ்வில் அனைத்து நன்மைகளும் பெறுவோம்,”என்றார். ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள், பக்தர்கள் செய்தனர்.