திருமலைக்குமாரசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்
கடையநல்லூர் : பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழியில் பிரசித்தி பெற்று விளங்கும் திருமலைக்குமார சுவாமி கோயில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருக்குமர ஸ்தலங்களில் ஒன்றாகும். முருக பக்தர்களால் 7ம் படை வீடாக வழிபட்டு வரும் திருமலைக்குமார சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 24ம் தேதி திருக்குமரனுக்கு சிறப்பு அலங்கார, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கோயில் மலைப் பகுதியில் சுவாமி திருவீதியுலா நடந்தது. கந்த சஷ்டி விழாவின் 7ம் திருநாளன்று உச்சிகால பூஜைக்குபின் சுவாமி மலையிலிருந்து வண்டாடும் பொட்டலுக்கு எழுந்தருளினார். பெருந்திருப்பாவாடை நிகழ்ச்சி எடுத்து வண்டாடும் பொட்டலுக்கு வருகை தந்த குமரனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு மலைக்கோயிலுக்கு சுவாமி புறப்பட்டார். தொடர்ந்து சண்முகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. நேற்று சஷ்டியன்று மதியம் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருக்குமரன் சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டு வந்தார். அடிவாரத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பக்தர்களால் திருக்குமரன் சூரசம்ஹாரத்திற்காக அழைத்து வரப்பட்டார். அதனை தொடர்ந்து மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. சூரசம்ஹார விழாவில் பண்பொழி, கரிசல்குடியிருப்பு, செங்கோட்டை, வடகரை, நெடுவயல், அச்சன்புதூர், கடையநல்லூர், தேன்பொத்தை, சீவநல்லூர், இலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.