காசிவிசுவநாதர் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் காசிவிசுவநாதர், உலகம்மன் சன்னதிகளுக்கு மத்தியில் பாலமுருகன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சூரசம்ஹார விழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முருகப் பெருமான் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார். சூரன்களை எதிர்கொள்ள கீழரதவீதியில் சுவாமி தயாராக இருந்தார். அப்போது எதிர்வந்த சூரன்களை கீழரத வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதிகளில் சுவாமி வதம் செய்தார். இறுதியில் கீழரத வீதியில் மகா சூரனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றிய நிகழ்ச்சி நடந்தது. சூரன்களை போல் வேடமணிந்த பக்தர்கள் சுவாமியை வலம் வந்து தரிசனம் செய்தனர். அப்போது "வேல் வேல் முருகா... வெற்றி வேல் முருகா என பக்தர்களின் கோஷங்கள் விண்ணை முட்டியது. சிறப்பு தீபாராதனை நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.பாண்டியராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
* தென்காசி கீழப்புலியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று மதியம் பாலாபிஷேகம், உச்சிக்கால பூஜை நடந்தது. மாலையில் சப்பர வீதி உலா, வேல் வாங்குதல், தம்பிராட்டியம்மன் கோயில் வளாகத்தில் சூரசம்ஹாரம், முழுக்காப்பு அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் இறுதி நாளான இன்று (1ம் தேதி) இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.