உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

நெல்லை முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

திருநெல்வேலி : நெல்லை முருகன் கோயில்களில் நேற்று பக்தர்களின் "அரோ ஹரா கோஷம் விண்ணை பிளக்க சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது. நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 26ம்தேதி துவங்கியது. இதனையடுத்து தினமும் காலை, மாலையில் யாகசாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று மாலை கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அப்போது குறுக்குத்துறை டவுன் ரோடு, மேலக்கோயில் அருகில், 7ம் திருநாள் மண்டபம் அருகில் உட்பட 4 இடங்களில் சுவாமி சூரனை சம்ஹாரம் செய்த போது, அங்கு திரண்டிருந்த பக்தர்களின் "அரோ ஹரா கோஷம் விண்ணை பிளந்தது. இதனையடுத்து சுவாமி 7ம் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(1ம்தேதி) காலை 11 மணிக்கு தபசுக் காட்சியும், இரவு 7மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. நாளை(2ம்தேதி) முதல் 4ம்தேதி வரை ஊஞ்சல் திருவிழாவும், 5ம்தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.

சாலைக்குமாரசுவாமி கோயில் : நெல்லை ஜங்ஷன் சாலைக்குமார சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 26ம்தேதி துவங்கியது. தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு சுவாமி உள்சுற்று வீதிவலம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை பூர்ணாஹூதி, தீபாராதனை, கும்ப ஸ்தானபமும், 11 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு சண்முகார்ச்சனை, அலங்கார தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி எழுந்தருளி நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, சிந்துபூந்துறை சிவன் கோயில் அருகில், சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோயில் அருகில், மேகலிங்கபுரம் பகுதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜங்ஷன், சிந்துபூந்துறை, மேகலிங்கபுரம், உடையார்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

இதனையடுத்து மாலை 6 மணிக்கு கந்தபுராணம் தொடர் சொற்பொழிவும், இரவு 7.15மணிக்கு மாணவிகளின் பரதநாட்டியமும், 8.30 மணிக்கு இன்னிசை வழக்காடு மன்றமும், 9 மணிக்கு தாகசாந்தி அபிஷேக ஆராதனையும் நடந்தது. இன்று(1ம்தேதி) காலை அம்பாள் தபசுக்காட்சி எழுந்தருளலும், 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சுவாமி காட்சியும், இரவு 10 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கந்தபுராணம் தொடர் சொற்பொழிவும், 6.30 மணிக்கு சொற்பொழிவும், 8 மணிக்கு பக்தி மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 2ம்தேதி முதல் 4 ம்தேதி வரை காலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்பாள் ஊஞ்சல் திருவிழாவும் நடக்கிறது. 5ம்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

பாளை., வரசித்தி விநாயகர் கோயில் : பாளை., அரசு அலுவலர் "ஏ குடியிருப்பில் உள்ள வரசித்தி விநாயகர் மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26ம்தேதி துவங்கியது. தினமும் காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, தீபாராதனையும், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. நேற்று மாலை கந்த சஷ்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று(1ம்தேதி) காலை 9 மணிக்கு கும்ப பூஜை அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணமும், 7.30 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. இதுதவிர நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில், பாளை., சிவன் கோயில், மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், நெல்லை ஜங்ஷன் கைலாசநாத சுவாமி கோயில், தச்சநல்லூர் சிவன் கோயில் உட்பட பல்வேறு சிவன் மற்றும் முருகன் கோயில்களில் நேற்று கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !