உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெற்றிக்கண் திறப்புடன் காமன் பண்டிகை நிறைவு

நெற்றிக்கண் திறப்புடன் காமன் பண்டிகை நிறைவு

சின்னாளபட்டி;சின்னாளபட்டியில் மூன்றாம்பிறை தரிசனத்துடன் துவங்கிய 132 ஆண்டு பாரம்பரிய காமன் பண்டிகையில், நிறைவாக சிவன் நெற்றிக்கண் திறப்பு நடந்தது. சின்னாளபட்டி கடைவீதியில் உள்ள காமைய(காமன்)சுவாமி கோயில், திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடத்தப்படும். பேக்கரும்பு உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு, 15 நாட்கள் தொடர் பூஜை நடைபெறும். காமன் கதை படித்தல், நெற்றிக்கண் திறப்பு, சுவாமி தகனம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, பிப். 28-ல் மூன்றாம்பிறை தரிசனத்துடன் துவங்கியது. பிருந்தாவன தோப்பில், பேக்கரும்பு, மா, ஆமணக்கு, அரசு, அரளி இலைகள், பூக்களால் சுவாமி அலங்கரித்தல் நடந்தது. பிறை தரிசனத்தைத்தொடர்ந்து, ஊர்வலம் நடந்தது. கோயில் பீடத்தில் சுவாமி ஊன்றுதலுடன், 15 நாட்கள் வழிபாடு நடந்தது. நேற்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நெற்றிக்கண் திறப்பு நடந்தது. இதற்காக, ரதி, மன்மதன் உருவம் வரைந்த அட்டையுடன் அரளிக்குச்சியில் தயாரான வில், அம்பு ஊர்வலம் நடந்தது. கோயில் முன்பு, சிவன் நெற்றிக்கண் திறப்பிற்கான காமன் கதையின் இறுதிப்பகுதி படிக்கப்பட்டது. நெற்றிக்கண் திறப்புடன், காமையசுவாமி தகனம் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் உப்பு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !